கிளப் சாண்ட்விச் பரோட்டா எப்படிச் செய்வது

என்னென்ன தேவை?

மேல் மாவிற்கு…

கோதுமை மாவு – 2 கப்,
உப்பு – தேவைக்கு.

ஸ்டஃப்பிங்க்கு…

உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் – தலா 1,
தக்காளி – 1,
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்,
சீஸ் ஸ்லைஸ் – 2,
பனீர் – 4 துண்டுகள்,
சாட் மசாலாத்தூள் – 1 சிட்டிகை,
உப்பு, மிளகுத்தூள் – தேவையானஅளவு,
டொமேட்டோ கெட்ச்அப் – 3 டீஸ்பூன்,
மையோனைஸ் – 3 டீஸ்பூன்,
புதினா சட்னி – 3 டேபிள்ஸ்பூன்.

எப்படிச் செய்வது?

மேல் மாவிற்கு கொடுத்ததை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து சம அளவு உருண்டைகளாக பிரித்து உருட்டிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் அனைத்தையும் உப்பு சேர்த்து அரை பதத்திற்கு வேகவைத்து தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் மையோனைஸ், கெட்சப்  சேர்த்து நன்றாகக் கலக்கி வைக்கவும். பனீரை துருவிக் கொள்ளவும். மூன்று உருண்டைகளை எடுத்து தனித்தனியாக 3 அங்குல அகலத்தில் சப்பாத்தியாக இட்டு தோசைக்கல்லில் வெண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.

பரிமாறும் முறை…

ஒரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள்ஸ்பூன் கெட்சப் கலவையை பரப்பவும். அதன் மேல் வெந்த உருளைக்கிழங்கு, பீட்ரூட், சீஸை வைத்து சாட் மசாலாத்தூளை தூவி வைக்கவும். மற்றொரு சப்பாத்தியின் நடுவில் 2 டேபிள் ஸ்பூன் புதினா சட்னி தடவி, முதல் சப்பாத்தியின் மீது வைத்து அதன் மேல் கேரட், தக்காளி ஸ்லைஸ், துருவிய பனீரை தூவி மூன்றாவது சப்பாத்தியை வைத்து மூடவும். அதன் மேல் வெண்ணெய் தடவி கிரில் செய்து பல் குத்தும் குச்சியால் குத்தி பரிமாறவும்.