சரும பிரச்சனைகளை போக்கும் வேப்பிலை பேஷியல் செய்வது எப்படி

நீங்கள் பன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் பலவற்றில் வேப்பிலை சேர்க்கப்பட்டு உள்ளதை நீங்கள் கவனித்துள்ளீர்களா….??? வேப்பிலையில் நிறைந்துள்ள சரும பயன்களே இதற்கு காரணம் ஆகும். வேப்பிலை நம் சருமத்திற்கு அற்புதமான பல நன்மைகளை தரக் கூடியது. வேப்பிலையில் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டிசெப்டிக் தன்மை அடங்கி உள்ளது.

மேலும் சருமத்திற்கு நன்மை பயக்கும் வைட்டமின் E சத்தும் வேப்பிலையில் காணப்படுகிறது. வேப்பிலை கலந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதை விட அதனை ஃபிரஷாக பயன்படுத்தினால் அதனால் நம் சருமத்திற்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

ஒரு சில வேப்பிலை இலைகளை பறித்து அதனை பல முறைகளில் சருமத்திற்கு பயன்படுத்தலாம். பேஸ்டாக அரைத்த வேப்பிலையை நம் தினசரி சரும பராமரிப்பு சுழற்சியில் சேர்த்து வரலாம். வேப்பிலையை சருமத்திற்கு பயன்படுத்தும் முறை குறித்து இந்த பதிவில் காணலாம். இந்த முறைகளை பின்பற்றி சரும பிரச்சனைகளை சுலபமாக எதிர்த்து விடலாம்.

★வேப்பிலைக்கு உள்ள ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி ஃபங்கல் காரணமாக பருக்களைக்கு எதிராக அது சிறப்பாக போராடுகிறது. ஒரு சில வேப்பிலை இலைகளை எடுத்து அதனை மைய அரைத்து கொள்ளவும். இதனோடு சிறிதளவு கடலை மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி கொள்ளவும். இதனை சிறிது நேரம் அப்படியே விட்டு காய விடுங்கள். பிறகு வட்ட வடிவில் தேய்த்து அதனை கழுவவும். இதில் சேர்க்கப்பட்டுள்ள கடலை மாவானது சருமத்திற்கு ஒரு ஸ்கிரப் போல செயல்படும். பருக்களில் இருந்து விடுபட வேப்பிலை உதவி செய்யும். ரோஸ் வாட்டர் சருமத்திற்கு தேவையான போஷாக்குகளை வழங்குகிறது.

★முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை போக்க வேப்பிலை பேஸ்ட் நமக்கு பெரிதும் உதவும். இதற்கு சிறிதளவு வேப்பிலை இலை விழுதினை எடுத்து அதனோடு இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து கலந்து முகத்தில் தடவி கொள்ளுங்கள். இது நன்றாக காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை மறைய செய்து தழும்புகளையும் போக்கும்.

★வேப்பிலையை கொண்டு இயற்கையான ஒரு சரும டோனரை நீங்கள் வீட்டிலே செய்து கொள்ளலாம். இந்த டோனரில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கி உள்ளது. இந்த இயற்கை டோனரை செய்ய சிறிதளவு வேப்பிலை இலைகளை எடுத்து அதனை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து கொள்ளுங்கள். ஒரு பஞ்சை இந்த நீரில் முக்கி முகத்தில் தடவி இரவு முழுவதும் அப்படியே விடவும். இந்த நீரை அதிக நாட்களுக்கு பயன்படுத்த கூடாது. ஒரு முறை செய்து இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தி கொள்ளலாம்.