சுவையான கொண்டைக்கடலை புலாவ்

காலை வேளையில் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிடுவதற்கு ஆரோக்கியமான ஒரு ரெசிபி செய்ய நினைத்தால், கொண்டைக்கடலை புலாவ் செய்து கொடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியதும் கூட.

பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம். சரி, இப்போது அந்த கொண்டைக்கடலை புலாவ் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!

தேவையான பொருட்கள்:

அரிசி – 1 கப்

கொண்டைக்கடலை – 25 கிராம் (நீரில் 2 மணிநேரம் ஊற வைத்தது)

தக்காளி – 2 (நறுக்கியது)

உருளைக்கிழங்கு – 1 (வேக வைத்தது)

குடைமிளகாய் – 1 (நறுக்கியது)

சீரகம் – 1 டீஸ்பூன்

பிரியாணி இலை – 1

பெருங்காயத் தூள் – 1/2 டீஸ்பூன்

இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்

மாங்காய் தூள் – 1/2 டீஸ்பூன்

கரம் மசாலா – 1/4 டீஸ்பூன்

கொத்தமல்லி – சிறிது (நறுக்கியது)

தண்ணீர் – 2 கப்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியை நீரில் 15 நிமிடம் ஊற வைத்து, நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் கொண்டைக்கடலையை நன்கு நீரில் கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 5 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து கொண்டைக்கடலையை தனியாக ஒரு பௌலில் எடுத்து வைக்க வேண்டும்.

பின்பு மற்றொரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம் சேர்த்து தாளித்து, பின் இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து, உப்பு தூவி, தக்காளி நன்கு வதங்கும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலை, உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் ஊற்றி 8 நிமிடம் மூடி வைத்து கொதிக்க விட வேண்டும்.

அடுத்து அதில் அரிசி, குடைமிளகாய் சேர்த்து கிளறி, குக்கரை விசில் போடாமல் மூடி வைத்து, 12-15 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

தண்ணீர் வற்றி சாதமானது வெந்துவிட்டால், அதில் மாங்காய் தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்கி கொத்தமல்லியைத் தூவிவிட்டால், சுவையான கொண்டைக்கடலை புலாவ் ரெடி!