உங்களுக்கு தெரியுமா நீண்ட அழகிய நகங்களை எப்படி பெறுவது

உங்கள் நகங்களை பராமரிப்பதில் சிரமம் உள்ளதா…??? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான். எல்லா பெண்களுக்கும்  பளபளக்கும் முடி, பொலிவான சருமம், அழகான நகம் ஆகியவற்றை வைத்துக் கொள்வதில் ஆர்வம் அதிகம். நீண்ட நகங்களை வளர்த்து அதனை எப்படி பாதுகாப்பது என்று தெரியாமல் இருக்கும் பெண்களும் உண்டு. அவை அவ்வப்போது உடைந்து போகும் போது கஷ்டப்பட்டு வளர்த்த நகம் உடைந்து போய் விட்டதே என்று எண்ணி வருத்தப்படுவார்கள்.

இன்னும் ஒரு சிலருக்கு சொத்தை நகம் போன்ற பிரச்சனைகளும் இருக்கும். சருமம் மற்றும் தலைமுடியை பாதுகாப்பது போலவே ஒரு சில முயற்சிகளை நம் நகங்களை பராமரிக்கவும் நாம் எடுக்க வேண்டும். இதற்கென்று அழகு நிலையங்கள் சென்று வீணாக பணத்தை செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் கேட்டால் அதை அறவே தவிர்க்கலாம். ஏனெனில் கண்ட கண்ட கிரீம்களை தடவி நகங்களை செயற்கையாக பராமரிக்கப்படும் அழகு நீண்ட காலம் நீடிக்காது.

எனவே எப்போதும் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நம்மை நாம் அழகுபடுத்திக் கொள்ள வேண்டும். இப்போது நகங்களை பராமரிக்க ஒரு சில டிப்ஸுகளை பார்க்கலாம்.

★ஆரோக்கியமான உணவு முறை:

எப்போதும் சத்தான உணவுகளை எடுத்துக் கொண்டால் அது நம் முழு உடல் ஆரோக்கியத்தையும் பார்த்து கொள்ளும். இதனுள் நகத்தின் ஆரோக்கியமும் அடங்கும். வைட்டமின் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு வந்தால் அழகிய நீண்ட நகங்களை பெறலாம். நகங்கள் அடிக்கடி உடைவது, நகங்கள் சத்து இல்லாமல் இருப்பது, நகங்களில் குழிகள் காணப்படுவது போன்றவை வைட்டமின் குறைப்பாடுகளால் ஏற்படுகின்றன.

★அடிக்கடி நகங்களை ட்ரிம் செய்யுங்கள்:

நீண்ட நகங்கள் இருந்தால் அது அடிக்கடி உடைந்து போக வாய்ப்பு உள்ளது. எனவே  ட்ரிம் செய்வதன் மூலம் அது உடைந்து போவதை தடுக்கலாம். எந்த அளவு நீளமுள்ள நகங்களை உங்களால் பாதிப்பில்லாமல் வைத்துக் கொள்ள முடியும் என்பதை கண்டறிந்து அதற்கு ஏற்ப நகங்களை ட்ரிம் செய்தல் நலம்.

★நகங்களை சுத்தம் செய்யுங்கள்:

அடிக்கடி கைகளை நன்றாக கழுவி விடுவது நகங்களின் பாதுகாப்பை பேணும். நகங்களை சுத்தம் செய்ய பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். ஒரு ஈரமான பல் துளக்கும் பிரஷ்ஷை எடுத்து அதனை பேக்கிங் சோடாவில் முக்கி நகங்களை ஸ்கரப் செய்து வர நகங்கள் பள பளவென்று இருக்கும். இதில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கூட சேர்த்து கொள்ளலாம்.